Saturday, March 21, 2015

மிம்பரில் மவ்லவி அவர் காலடியில் மாக்கள் கூட்டம்

மூல ஆக்கம் : பைஸல் (முகநூலிலிருந்து)
வரலாற்றுப் பாடம் நடக்கிறது. மிம்பரில் மவ்லவி. அவர் காலடியில் மாக்கள் கூட்டம். கேள்விகள் கேட்காமலேயே... விசாரணைகள் இல்லாமலேயே... சொல்லப்படுவதை எல்லாம் தேவ வாக்குகளாய் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்ட... இல்லை... பழக்கப்படுத்தப்பட்ட மாக்கள் கூட்டம்.


கருத்துக்களை விமரிசனம் செய்யும் அறிவியல் கலாச்சாரம் எம் மத்தியிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. என்ன சொல்லப்படுகின்றது என்பதை விட்டும் யார் சொல்கின்றார் என்பதிலேயே கவனம் உள்ளது. சொல்பவர் ‘நம்ம ஆள்’ என்றால் அவர்கள் சொல்லுவது எல்லாமே சரி. ‘நம்ம ஆட்கள்’ எல்லோருமே முஸ்லிம் சமூகத்தைப்பற்றி கேவலமாகவே பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
சுய விமரிசனத்திற்கும் கண்மூடித்தனமான வசை பாடல்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் புரியாத சமூகமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். உலமாக்களிடம் விமர்சனமும் இல்லை; சுய விமர்சனமும் இல்லை; வெறும் வசை பாடல்கள் மாத்திரமே உண்டு.
ஒரு முஸ்லிமின் சுயபெறுமானத்தை சிதைக்கும் இடம் இன்றைய பள்ளிவாசல்கள். அதைச் செய்பவர்கள் எமது உலமாக்கள்.
தன் சமூகம் பற்றிய பெருமை இழந்த... தன் சமூகம் பற்றிய தாழ்வான எண்ணமே கொண்ட... பிற சமூகங்களின் முன்னே... கூனிப்போய்... குறுகிப்போய்... வெட்கப்பட்டு... முஸ்லிம் என்ற தன் அடையாளத்தையே மறைத்துக் கொண்டு நிற்கின்ற முஸ்லிம்களால் என்ன பயன்? முஸ்லிம்கள் விமர்சிக்கப்படும் போது அந்த விமரிசனங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. முஸ்லிம்கள் தாக்கப்படும் போது அவர்களால் தற்காப்பு செய்ய முடியாது. இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்கள் கேவலமாக விமர்சிக்கப்படுவதும்... தாக்கப்படுவதும் நியாயம் என்றே அவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறான முஸ்லிம்கள் உணர்வு ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் முஸ்லிம் விரோத சக்திகளுடனேயே அதிகம் பிணைந்து காணப்படுகின்றார்கள்.
உலமாக்களின் வேலை முஸ்லிம்களின் தன் நம்பிக்கையை... முஸ்லிம்களின் சுய பெறுமானத்தை வளர்ப்பதாகவே இருக்கவேண்டும். அதை அழிப்பது அல்ல. அது இஸ்லாமிய விரோதிகளின் வேலை.
வசை பாடல்களை எந்த முட்டாளினாலும் செய்ய முடியும். ஆனால், அவதூறுகளையும் மெய்யான குற்றச்சாட்டுகளையும் வேறுபடுத்தவும், ஒரு சமூகத்தின் சிறப்புத் தன்மைகளை அடையாளப்படுத்தவும் அறிவார்ந்த, சிந்தனா திறன் கொண்ட ஒருவரால் மாத்திரமே முடியும். இன்றைய எமது உலமாக்கள் இந்தத் திறனை முற்றாக இழந்து நிற்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வசைபாடல்களை இவர்கள் தம் தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
முஸ்லிம் சமூகம் மலக்குத் தன்மை கொண்ட சமூகம் அல்ல; அது ஒரு மானிட சமூகம். எல்லா சமூகங்களிலும் உள்ளது போல் அதிலும் தவறுகள் காணப்படும். மறுக்கவில்லை! ஆனால் அதன் பலவீனங்களை பிற சமூகங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதானால் போதிய ஆதாரம் வேண்டும். ஆதாரம் இல்லாத பேச்சுக்கள் எல்லாம் வெற்றுப் பேச்சு. இந்த வெற்றுப் பேச்சுகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தின் யதார்த்த நிலையை அறிய முடியாது; அதைக் கக்குவோரின் குறுகிய மனப்பாங்கையும் அவர்களின் அறிவுப் பலவீனத்தையும் மாத்திரமே உணர முடியும்.
முஸ்லிம் சமூகம் ஒரு மகத்தான சமூகம். அது விழவில்லை. அது வீழ்த்தப்பட்டுள்ளது. எத்தனையோ சவால்களுக்கும் மத்தியில் அது எழுந்து நிற்க முயற்சிக்கின்றது. அதை ஊக்கப்படுத்த வேண்டும். அதை உதைக்கக் கூடாது!





1 comment:

  1. மவ்லவிகளை வணங்கும் மடையர்கள் இருக்கும் வரை இந்த முஸ்லிம் உம்மத்தை திருத்தவே முடியாது.

    ReplyDelete