முஸ்லிம்களின் விவேகமற்ற அணுகுமுறை, தூங்கிக் கொண்டிருந்த இனவாதப் பேயை தட்டி எழுப்பி விட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில், அரச ஆதரவுடன் இடம்பெற்று வந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் தணிந்து போயிருந்த நேரத்தில், பொரள்ள பள்ளிவாசல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆட்சி மாறினால், எல்லாம் தாம் நினைத்தபடி ஆகிவிடும், தாம் நாட்டில் நினைத்த மாதிரி கூத்துப் போடலாம் என்கின்ற வாறான மனநிலை முஸ்லிம்கள் மத்தியில் தோன்றி இருந்ததை மறுக்க முடியாது. அதன் வெளிப்பாடாக, மியன்மாரின் தற்போதைய நிலைமைகளை சரியாகக் கூட அணுகாமல், உணர்ச்சிகளுக்கு மட்டும் ஆட்பட்டு கூச்சல் போட்டதன் விளைவு, "கேட்டுத் திண்ட பருப்பு" என்கின்ற கொழும்பின் பேச்சுத் தமிழை ஞாபகமூட்டுகின்றது.
இலங்கையில் ஆட்சி மாறினாலும், இனவாத நடவடிக்கையில் ஈடுபட்ட மனிதர்கள் மாறவில்லை. பெரும்பாலான இளைஞர்கள் இனவாதிகளாக மாறி இருப்பதற்கு, அவர்கள் நியாயமானவை என கருதும் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முஸ்லிம் வியாபாரிகளின் நேர்மையற்ற தன்மை, தமது முழுச் செல்வத்தையும் ஆடம்பரமாக காட்டி பகட்டு வாழ்க்கை வாழும் முஸ்லிம்கள், முகமூடிய கருப்பு அங்கிகள், ஆண்களிடம் புதிதாக தொற்றியுள்ள நீண்ட அரபு நாட்டு ஜுப்பா, முஸ்லிம்கள் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலைமை என்று பல விடயங்கள் உள்ளன.
ஆட்சி மாறினாலும், இவற்றை தினம் தினம் கண்டு, தமது நாடு தமக்கு இல்லாமல் போய்விடுமோ என்று செயற்கையாக பயமூட்டப் பட்டு இருக்கும் சிங்கள பெளத்தர்களின் மனநிலை இலகுவில் மாறிவிடப் போவதில்லை.
இலங்கையில் எந்த ஒன்றை செய்வதற்கும் ஆட்சியின் ஆதரவு இருக்க வேண்டும் என்கின்ற நிலைமை இல்லை என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. ஆட்சி மாற்றமே, ஆட்சி இல்லாதவர்களால்தான் மேற்கொள்ளப் பட்டது என்கின்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆகவே, இனவாத நடவடிக்கைகள் ஆட்சி இருந்தால் மட்டும்தான் நடக்கும் என்றில்லை.
மியன்மாரில் அண்மைய நாட்களில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையான "பாரிய வன்முறைகள்" எதுவும் இடம்பெற்றிராத நிலையில், இரண்டு முக்கிய முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் கடலில் தத்தளித்த மியன்மார் முஸ்லிம் அகதிகளின் பிரச்சினையை பிழையாக புரிந்துகொண்ட, உணர்ச்சிகளுக்கு மட்டுமே அடிமைப்பட்டதன் விளைவுதான், இன்றைய நிலைக்கான முக்கிய காரணம் ஆகும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாரிய வன்முறை தொடர்பான புகைப்படங்கள், திபெத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள், ஆபிரிக்க நாடொன்றில் எண்ணைக்குழாய் வெடிப்பில் கருகிய உடல்கள், சில திரைப்படக் காட்சிகள் என்று எல்லா புகைப்படங்களையும், "இதோ இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை" என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பெளத்த மதத்தையும், துறவிகளையும் இழிவு படுத்தியமை, மோசமான வார்த்தைகளை பொதுக் கலந்துரையாடல்களில் பயன்படுத்தியமை என்று "உசார் மடையர்களாக" செயல்பட்டு, தூங்கி இருந்த இனவாதப் பேயை தட்டி எழுப்பி விட்டுள்ளது முஸ்லிம் சமூகம்.
"இவை அல்லாஹ்வுடைய வசனங்கள் தான் என்று சொல்லப் பட்டாலும், அவர்கள் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு நம்ப மாட்டார்கள்" என்று உண்மையை தேடி அறியும் ஆற்றலுக்கு வரைவிலக்கணம் கொடுத்த மார்க்கத்தில் இருந்துகொண்டு, சமூக ஊடகங்களில் ஊர் பேர் தெரியாமல் பகிரப்பட்ட செய்திகளை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதன் விளைவின் ஒரு சிறு வெளிப்பாட்டையே பொரள்ள சம்பவம் சுட்டிக் காட்டி நிற்கின்றது.
குறைந்த விலையில் இன்டர்நெட் உம், பைரேட்டட் வெர்சன் போட்டோ ஷாப் உம், சமூக ஊடகங்களில் இலவசமாக "Share" ஒப்ஷனும் கிடைக்கின்றது என்பதற்காக, அவற்றை துஸ்பிரயோகம் செய்தால், அல்லாஹ்வின் தண்டனை கூட இனவாதிகள் வடிவில் வரலாம்.
ஏற்கனவே வரலாற்றில் இருந்து படம் கற்றுக்கொள்ள மறந்த முஸ்லிம் சமூகம், இதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அல்லாஹ்தான் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும்.
( முக்கிய குறிப்பு : மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.)
No comments:
Post a Comment