Saturday, March 14, 2015

ஆப்கானில் போராடிய இலங்கை முஜாஹிதீன் நேரடி அனுபவம் - பகுதி 03

குல்புதீன் ஹிக்மதியார் தனது பல்கலைகழக பருவத்தில் தனது சகாக்களுடன் சேர்ந்து முகத்திரை அணியாமல் வந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் முகத்தில் அசிட் வீசி அவள் முகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கியதன் ஊடாக தனது இஸ்லாமிய விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்.
பகுதி 03 தொடர்கின்றது.........


இளம் காஷ்மீரிகளிற்கு பயிற்ச்சியளிக்க வேண்டும். அவர்கள் பாஷை எனக்கு புரியாது. என் தமிழ் அவர்களிற்கு தெரியாது. ஆயினும் நான் செயற்பாடுகளை ஆரம்பித்தேன். போராளிகளிற்கு “தர்ப்பியத்” என்ற பெயரில் குறைந்த உணவு கொடுக்கும் வழக்கம் எல்லா இஸ்லாமிய இயக்க முகாம்களிலும் இருக்கும் வழமையாகும். இஹ்வான்களின் பைத்தியக்காரதனங்களில் இதுவும் ஒன்று.

அது எங்கள் முகாமிலும் இருந்தது.

எனது முதல் வேலை இந்த முட்டாள்தனமான பிற்போக்குவாத “தர்ப்பியத்” வழிமுறையை தகர்ப்பது. தகர்த்தேன். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல தூக்கம் என போராளிகளிற்கு தேவையான எல்லாம் கிடைத்தன. ஆனால் பயிற்ச்சி என்று வந்து விட்டால் அவர்களை பென்ட் எடுக்காமல் விடுவதில்லை.



வழக்கமாக அல்-பத்ர் கேம்பில் இருந்து வந்த பயிற்ச்சிகளிற்கு மாற்றமாக இருந்தது எனது பயிற்ச்சி முறைகள். ஒரு போராளி வெறுமனே ஏ.கே.47 இனை தூக்கி சுட்டால் போதும் எனுமளவிற்கே அவர்கள் எல்லாவற்றையும் டிசைன் பண்ணியிருந்தார்கள்.


இதில் எதுவோ உதைப்பது போல எனக்கு தோன்றியது. இஸ்லாமிய போராளி என்றால் அவன் எந்த ஒரு சூழலிலும் இருக்கும் வளங்களை கொண்டு இயற்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி செயற்படல் வேண்டும். நுண்ணறிவு, சமயோசிதபுத்தி, இயற்கையுடன் இணைந்து செயற்படும்பாங்க, சந்தர்பத்திற்கு ஏற்றவாறு எடுக்கும் துரித முடிவு, எடுத்த முடிவை தயங்காமல் செயற்படுத்தும் வேகம் பன்முக தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும். இருத்தல் அவசியமும் கூட. அந்த தன்மைகளை வளர்க்கும் முகமாக எனது பயிற்ச்சித்திட்டங்களும் பராமரிப்புகளும் நிர்வாகங்களும் அமைந்தன. இவை ஹிஸ்பி இஸ்லாமி தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்ட விடயம் அப்போது எனக்கு சத்தியமாகத் தெரியாது.



அமெரிக்கா உருவாக்கும் ஜிஹாத் அனைத்திலுமே ஒரு விடயம் கண்டிப்பாக இருக்கும். அமெரிக்க ஜிஹாதின் பர்ளு அய்னும் கூட அது. “மடையர்களை தலைவர்களாக்குவதே அந்த உக்தி”. சித்தாந்தங்களால் வழி நடாத்தப்படும் புத்திஜீவித்துவமிக்கவர்களும், கொள்கை தெளிவுடையவர்களும் நிச்சயமாக அமெரிக்க ஜிஹாதில் உள்வாங்கப்படுவதில்லை. தற்செயலாக அவர்கள் உள்வாங்கப்பட்டாலும் அவர்கள் “வைல் இன் அக்ஷன்” என்ற பெயரிலோ அல்லது “வைல் இன் ஒப்பரேஷன்” என்றே பெயரிலோ கொல்லப்பட்டுவிடுவர்.



நான் இரண்டு நாய்களை எனது முகாமில் வளர்த்தேன். எனது முகாமின் முன்னரங்க காவலரண் இரண்டு இருந்தன. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சென்றியில் நிற்பவர்கள் தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்வர். அவர்கள் மாறும் போது இந்த நாய்களும் ஒரு பொயின்டில் இருந்து அடுத்த பொயின்டிற்கு அவர்களுடன் சேர்ந்து மாறும். கார்ட் இல்லாவிட்டாலும் நாய்கள் தானாக மாறும் அளவிற்கு பயிற்றப்பட்டிருந்தன. நாங்கள் நாய்கள் வளர்ப்பதை பற்றிய இன்பர்மேஷன் ஹிஸ்பி இஸ்லாமி தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதுவும் எனக்கு தெரியாது. ஹிஸ்பின் தலைமை நான் இரண்டு ஷெய்த்தான்களை வளர்ப்பதாகவே அதனை நோக்கியது.


எமது பயிற்ச்சி, நாம் போராளிகளை கையாண்ட லாவகம், மனித முகாமைத்துவம் என்பன எங்களிடையே ஓர் ஆத்மார்த்மான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது. எங்களிடம் ஒரு குழு உணர்வும் மெல்ல வளர்ந்து வந்தது. எமது கட்டளைகளை நிறைவாக செயற்படுத்துவதில் எந்த போராளியும் தயங்கியதில்லை.


ஒரு நாள்.. எமது பயிற்ச்சி மையத்தை பார்வையிட பக்த்அமீன் சாகிப் அவர்கள் வருகை தந்திருந்தார். பாகிஸ்தானில் ஹிஸ்பி இஸ்லாமியின் பொருப்பாளர். I.S.I. யுடன் மிக மிக நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தவர். அது போலவே பாகிஸ்தானிய வஸிரிஸ்தான் பிராந்திய பழங்குடி கோத்திர தலைவர்களின் மத்தியில் செல்வாக்கு மிக்கவர். லஷ்கர் ஈ தய்பாவுடன் நெருக்கமான செயற்பாடுகளை கொண்டவர். அடிப்படையில் நல்ல மனிதர். முஜாஹித்களை நேசிப்பவர்.


எமது முகாமை மேற்பார்வையிட வந்த அவரை முன் சென்றியில் இருந்த காஷ்மீரிகள் திருப்பியனுப்பி விட்டனர். முகாமிற்கான விசிட்டிங் அவர்ஸ் முடிந்து விட்டது என்று முகாம் சட்டத்தை அவரிடம் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கவர் தான் யார் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார். யாராக இருந்தாலும் நாளை காலை வாருங்கள் என திருப்பியனுப்பினர் போராளிகள். அவர் கண்ணியமான முறையில் திரும்பி சென்று விட்டார். இந்த செய்தியும் ஹிஸ்பின் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் பக்தமீன் சாகிப் ஒரு ஒழுங்கான நிர்வாகம் உள்ள முகாம் என்றே எம்மை பற்றி குறிப்பிட்டிருந்தார்.


சில காலங்களின் பின்னர் ஒரு சம்பவம் நடந்தது. அது மிகவும் பாரதூரமான விடயம். அந்நாட்களில் செல்போன்களோ, இன்டர்நெட்களோ இல்லாத காலம். பலரது முகம் பலரிற்கும் தெரியாது. ஹிஸ்பி இஸ்லாமியின் தலைவர் குல்புதீன் ஹிக்மதியாரிற்கு, ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சலாஹுதீனை தெரியாது. இவ்வளவிற்கும் அல்-பத்ர் முகாம் என்பது ஹிஸ்புல் முஜாஹிதீனுடையது. அதற்கான இராணுவ பயிற்ச்சியை வழங்கியது ஹிஸ்பி இஸ்லாமி. இவர்கள் இருவருமே ஒரு பிளட்போர்மில் I.S.I. யிற்காக தொழிற்படும் இரண்டு விங்குகள் (Wings). புரிகிறதா போராட்டங்களின் நிலை. இவர்களிற்கே ஒருவரை ஒருவரிற்கு தெரியாத நிலையில் ஒரு காஷ்மீரிய போராளிக்கு எப்படி தெரியும் குல்புத்தீன் ஹிக்மதியார் யார் என்று?


ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் காஸி ஹுசைன் அஹமத், குல்புதீன் ஹிக்மத்யார் மற்றும் எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமினின் முக்கிய தலைவர் ஒருவருடன்.........


எமது முகாமை பார்வையிட வந்த ஹிக்மதியாரும் அவரது எஸ்கொட்  டீம் மற்றும் பொடி கார்ட்களும் தங்கள் பிக்-அப்களை கீழே நிறுத்தி விட்டு முகாமை நோக்கி மெல்ல ஏறி வர ஆரம்பித்தனர். இதனை அவதானித்த அல்-பத்ர் 1 சென்றி போயின்ட் இல் இருந்தவர்கள் தகவலை மற்றவர்களிற்கு தெரியப்படுத்த அவர்கள் மெல்ல கவர் எடுத்து நகர்ந்து ஹிக்மதியாரின் போராளிகளின் பின்புறமாக மூவ் பண்ணி அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டதுடன் அவர்களது ரைபிள்களை சீஸ் பண்ணி விட்டனர். டிஸ்-ஆர்ம் பண்ணப்பட்ட நிலையில் நிராயுத பாணிகளாக்கப்பட்டனர் ஹிக்மதியாரும் அவர் டீமும்.


மேற்கின் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளும் போராளி குழுத்தலைவர் அவர். ரஷ்யர்களின் சிம்ம சொப்பனம் என்று எமது லோக்கள் முல்லாக்களால் முங்கப்பட்ட மாவீரர். இரண்டாம் ஸலாஹுதீன் அய்யூபியென அன்று இஸ்லாமிய இயக்கங்கள் அவரை பற்றி தமிழில் எழுதித்தள்ளின. அவர்தான் சாதாரண காஷ்மீரிகளின் கைகளால் கைது செய்யப்பட்டவர்.


பின்னர் ஆள் யார் என்று தெரியாமல் நடந்த தவறு என்பது அவரிற்கு புரியவைக்கப்பட்டது. கூடவே முன்னறிவிப்பின்றி ஆயுதங்களுடன் வந்ததனால் அரஸ்ட் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றும் கூறி ஒருவாறு சமாதானம் செய்யப்பட்டது. இது பெரும் கொந்தழிப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.


அமெரிக்காவை மிக வன்மையாக எதிர்க்கும் முஜாஹிதீன் லீடராகவே அவர் உலகிற்கு அறிமுகமானார். அமெரிக்காவும் மேற்கும் எமது அடுத்த இலக்கு என்று அவர் சொன்ன வார்த்தைகளை தமிழ் பேசும் நாடுகளிலும் எமது முல்லாக்கள் சொல்லி சொல்லி புளுகாங்கிதம் அடைந்தார்கள். ஆனால் அந்த அமெரிக்க எதிர்ப்பாளர் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை வைத்தே சண்டையிட்டார். அமெரிக்கா வழங்கிய பணத்தை கொண்டே தனக்கு தேவையான சப்பாத்தியையும் ஆட்டிறைச்சியையும் சமைத்தார். இவை அவரிற்கு I.S.I. யினால் வழங்கப்பட்டன. டொலர் விளையாட்டில் இதுவும் ஒன்று என்பதை இப்போதைக்கு புரிந்து கொள்ளுங்கள்.


குல்புதீன் ஹிக்மதியார் தனது பல்கலைகழக பருவத்தில் தனது சகாக்களுடன் சேர்ந்து முகத்திரை அணியாமல் வந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் முகத்தில் அசிட் வீசி அவள் முகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கியதன் ஊடாக தனது இஸ்லாமிய விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். அதுதான் அவரது முதலாவது ஜிஹாது பீ சபிலில்லாஹ்.


கொமாண்டர் மசூதின் போராளிகளை தேடி தேடி வேட்டையாடியது இவரது அமைப்பு. தஜீக் போராளிகள் எங்கிருந்தாலும் கொல்லும்படி உத்தரவிட்டவர் இந்த ஹி்க்மதியார். இது ஈழப்போராட்டத்தில் கேர்ணல் கிட்டு, டெலோ இயக்கத்தினரை வேட்டையாடி கொண்று குவித்த சகோதர இனப்படுகொலையை ஒத்த பாசிஸ வழிமுறை என்பதில் எனக்கு இரு கருத்துக்கள் கிடையாது.



எல்லா முஜாஹிதா அணிகளையும் அழித்து இறுதியல் ஹிஸ்பி இஸ்லாமி மட்டும் எஞ்சி நிற்கும் பாசிஸ ஒடுக்குமுறையாளர். இதைத்தான் புலி பயங்கரவாதிகளும் 1980 களின் இறுதியில் ஈழத்தில் செய்தனர். தாங்கள் மட்டும் போராட வேண்டும் என்ற சிந்தனையில். ஒரு முறை ஒரு சக முஜாஹிதா அமைப்பின் போராளி ஒருவரை இவரது தளபதி ஒருவர் 50 கலிபர் கொண்டு சுட்டு கொண்றார். அவர் உடலை சல்லடை போட்டு சிதைத்தார்.

அன்று உமையா ஆட்சியாளர்கள் செய்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது. இதைத்தான் யாழ்ப்பாணம் கந்தன் கருணையில் ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகளையும் ஓல்ட் பார்க்கில் டெலோ போராளிகளையும் மாத்தையாவும், கிட்டுவும் செய்தனர். அப்படியானால் இவர்கள் அவர்கள் எல்லோருமே ஒரு அணியினர் தானே. ஆம். நான் அப்படித்தான் எண்ணுகிறேன் இப்போது.


இதன் பின்னர் முகாமில் இன்னும் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை ஐ.எஸ்.ஐ. எனும் பாகிஸ்தான் உளவமைப்புடன் சம்மந்தமுடையவை.



எமது முகாமின் பயிற்ச்சிகள் உஸ்தாத் ஹிக்மதியார் சாகிப்பிற்கு புதிதாகவும் புதிராகவும் இருந்தது. இவ்வாறான பிஸிகல் ட்ரெய்னிங்கை அவர் கண்டது கிடையாது. பயிற்ச்சி என்றால் கலஷ்னிகோவை எடுத்து எதிரியை நோக்கி ரவைகள் முடியும் வரை சுடுவதும், ஆர்.பி.ஜி.யை எடுத்து இலக்கை தாக்காவிட்டாலும் பரவாயில்லை என தாக்குதல் நடாத்துவதும் தான்.


சில நாட்களின் பின்னர் எமக்கு ஒரு கட்டளை வந்தது அதில் சில குறிப்பிட்ட பயிற்ச்சிகளை நிறுத்துமாறும். அவை தேவையில்லை என்றும் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் நிறுத்தி விட்டேன். எதிரியை தாக்குவதற்கு அதுவும் ரஷ்யன் ஸ்பெஷல் போர்சஸை தாக்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட பயிற்ச்சிகள் மட்டும் போதும் அதாவது சுடத்தெரிந்தால் மட்டும் போதும் என்று சொல்லும் இராணுவ தலைமையை எண்ணி எனக்கு வியப்பாகவிருந்தது.



அடுத்தவர் சலாஹுதீன். காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.யின் கைக்கூலியாக செயற்பட்டவர். ஆனால் அன்னாட்களில் எமக்கு அவர் ஒரு பெரிய முஜாஹித். உஸ்தாத் சலாஹுதீன் சாகிப். காஷ்மீரின் முஜாஹித்களின் கமாண்டர். மாவீரர். இது தான் எமக்கு சொல்லித்தரப்பட்டது.



கொமாண்டர் சலாஹுதீன்

சய்யீத் முஹம்மத் யூசுப் ஷா என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் ஹிஸ்புல் முஜாஹிதீன் கொமாண்டர் சலாஹுதீன் என்றால் எல்லோரிற்கும் தெரியும். பாகிஸ்தானிற்காக அதன் பணத்திற்காக போராடும் அனைத்து அமைப்புக்களின் கூட்டே “முதாஹிதா ஜிஹாத் கவுன்சில்”. அதன் தலைவரும் இவர்தான்.


இவரிற்கு 05 பிள்ளைகள். அனைவரும் அரச உத்தியோகத்தில். ஒரு பிள்னையை கூட காஷ்மீரிற்காக இரத்தம் சிந்த இவர் தயார்படுத்தவில்லை. இது தான் நான் பார்த்த ஜிஹாதிய கொமாண்ட்மென்ட்ஸ்.




ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை தலைமையேற்று நடாத்திய “மாஸ்டர்” என்பவரிற்கு பின்னர் யூசுப் ஷா அதன் தலைவராக்கப்பட்டார் ஐ.எஸ்.ஐ.யினால். அவரிற்கு அவர்கள் இட்ட பெயர். சலாஹுதீன். 12ம் நூற்றாண்டில் இஸ்லாமிய மாவீரன் சலாஹுதீன் அய்யூபியின் பெயர் இது.

(இவரைப் பற்றிய விக்கிபீடியா தகவல்கள் இந்த லிங்கில் உள்ளன : http://en.wikipedia.org/wiki/Sayeed_Salahudeen )

ஆப்கானிற்கும் அதன் போராட்டத்திற்கும் சம்மந்தம் இல்லாத மனிதன் இவர். ஆனால் நாங்கள் ஆப்கானில் இவரது பயிற்ச்சி மையத்தில் ஆப்கானிற்கான ஜிஹாத்திற்காக செயற்பட்டோம். இப்போது நினைத்து பார்க்க வெட்கமாக இருக்கிறது. அவர்கள் எங்களை எவ்வாறெல்லாம் முட்டாளாக்கியுள்ளார்கள் என்பதையிட்டு.


அடுத்த பகுதி விரைவில்.........



No comments:

Post a Comment