Thursday, August 21, 2014

மாத்தளை பள்ளிவாசல் சொத்துக்களில் மோசடி? வக்பு சபைக்கு கடிதம்

இலங்கையின் மாத்தளை மாவட்டத்தின் கொங்காவெல பள்ளிவாசலின் சொத்துக்களின் மோசடி தொடர்பாகவும், இதனை மையமாக வைத்து உருவாகியுள்ள நிர்வாக சபை முறைகேடுகள் மற்றும் நிர்வாக சபையின் நிரந்தரமில்லா தன்மை ஆகியவை குறித்தும் வக்பு சபைக்கு நேற்று அனுப்பப் பட்டுள்ள கடிதத்தின் பிரதி கிடைக்கப் பெற்றுள்ளது.


அதிக வாடகைக்கு கொடுக்கப் படக் கூடிய கடைகள், மிகக் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு, பள்ளிவாசலுக்கு மிகக் குறைந்த வாடகையை வழங்கிவிட்டு, கடை உரிமையாளர்களிடம் இருந்து பெருமளவு பணம் நிர்வாக சபை உறுப்பினர்களால் லஞ்சமாக பெறப்படுகின்றது.

சுமார் 25 000 - 40 000 ரூபாய் மாதாந்த வாடகைக்கு வழங்கப்படக் கூடிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான முக்கிய இடங்களில் அமைந்துள்ள பெறுமதியான கடைகளின் வாடகையாக இதுவரை நிர்வாக சபைகள் பள்ளிவாசலுக்காக அறவிடுவது வெறும் 1100 - 3000 ரூபாய் வாடகையே. அதாவது மிகக் குறைந்த தொகைக்கு பற்றுச் சீட்டு (ரசீட்) வழங்கிவிட்டு, குறித்த கடைக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக 15 000 - 25 000 ரூபாய் பணத்தை ஒவ்வொரு மாதமும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

இன்னும் சில கடைகளை பள்ளி நிர்வாகத்தில் இருப்பவர்கள் நேரடியாகவும், வேறு நபர்கள் (உறவினர்கள், நண்பர்கள்) மூலமாகவும் குறைந்த வாடகையில் நடாத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.

இன்னும் சில நிர்வாகிகள் மிகக் குறைந்த தொகைக்கு பள்ளிவாசலிடம் இருந்து கடைகளை வாடகைக்கு பெற்று, பெரிய தொகைக்கு வேறு ஆட்களுக்கு (3rd பார்ட்டி) கைமாற்றி வருகின்றனர்.

சுருக்கமாக சொன்னால் "அல்லாஹ்வின் பெயரால் முடிந்தவரை அடிப்போம் கொள்ளை" என்கின்ற தாரக மந்திரத்துடனேயே நிர்வாக சபைகள் செயற்பட்டு வருகின்றன.

பள்ளிவாசலுக்கு சொந்தமாக எத்தனை கடைகள் இருக்கின்றன? இதோ, வக்பு சபைக்கு அனுப்பப் பட்ட கடிதத்தை வாசியுங்கள், புரியும்.


 
20.08.2014.

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதன் கீழ் கையொப்பமிடும்,மாத்தளை கொங்காவெல பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த நாம்,உங்களிடம் உண்மையாகவும், தெளிவாகவும் அறிவித்துக் கொள்ளும் விடயம்…….


எமது பள்ளியில் அமைக்கப் பட்ட தற்காலிக நிர்வாக சபையின் பதவி காலம் காலாவதியான இச்சந்தர்ப்பத்தில், அடுத்து அமையவிருக்கும் நிர்வாக சபையை கை சுத்தமான, இறையச்சமும்,சமூக சிந்தனையும் கொண்ட புத்திஜீவிகளை கொண்டு அமைத்துத் தருமாறு முதற்கண் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.


மாத்தளை கொங்காவெல பள்ளியில் தொடர்ந்தும் நடைப் பெற்று வரும் குழறுபடிகள்,,பிரச்சினைகள் பற்றி வக்ப் சபை நன்கு அறியும். இப்பள்ளிவாயிலுக்கு 52 க்கும்(ஐம்பத்திரண்டு) மேற்பட்ட கடைகளும்,சொத்துக்களும் இருப்பதனாலோ என்னவோ ,பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.


மீண்டும்,மீண்டும் அமைக்கப் படும் நிர்வாக சபைகள் ஏதோவொரு இயக்கத்துக்கு சார்பானதாக அமைவதால், குறைவில்லாமல் கோஷ்டி மோதல்களும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சர்ச்சையும் பொலிஸ் நிலையத்தில் தான் முடிவடைகிறது.இதனால் கொங்காவெல பள்ளி ஜமாஅத்தினருக்கு மாத்திர மல்லாமல், மாத்தளை முஸ்லிம்களே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு நிலமை தொடர்கிறது.



காலாவதியான தற்காலிக நிர்வாக சபையினர் கடந்த 07.08.2014 இரவில் சுமார் இருபது வருடங்களாக சேவையாற்றி வரும் பேஷ் இமாம் முனீர் மௌலவி யவர்களை உடனே வெளியேறுமாரு மிரட்டியிருக்கிறார்கள். இதனால் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை இவ்விவகாரம் போய் விட்டது.


இப்பள்ளி நிர்வாக சபைக்குள் ஒருசிலர் நுழைவதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான காரணம் அதன் சொத்துக்கள் தான் என்பது ரகசியமல்ல, இதன் கடைகள் வர்த்தக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைந்துள்ளன. ஏற்கனவே சிறிய வாடகைக்கு பள்ளிக் கடைகளில் வர்த்தகம் செய்வோர் சுய லாபம் கருதி பெரிய வாடகைக்கு வேறு நபர்களுக்கு கைமாற்றி விடுகிறார்கள். இதன்போது லட்சக் கணக்கான பணம் பரிமாறப் படுகிறது. அதன் ஒரு பங்கு திறை மறைவில் டிரஸ்டிகளுக்கும் போய் சேர்ந்து விடுகிறது. பேராசைப்பிடித்தவர்கள் நிர்வாக சபைக்குள் நுழைவதற்கு இதுவே முக்கிய காரணம். இந்நிலை மாற வேண்டும் என்பதுவே எமது பிரார்த்தனையும் வேண்டுகோளுமாகும்.


எனவே குறிப்பிட்டதொரு ஜூம்மா தினத்தில், ஜமாஅத்தார்களின் நேரடி அனுமதி யோடு, உங்களது நேரடி கண்காணிப்பில் பொருத்தமான நிர்வாக சபையொன்றை தெரிவு செய்து தருமாரு வேண்டிக் கொள்கிறோம்.


குறிப்பு: குழப்பங்களை உருவாக்க அடிக்கடி மேற் கொள்ளப் படும் முயற்சிகளுக் கெதிராக வெளியிடப் பட்ட பிரசுரம் ஒன்றையும் இத்துடன் இணைத்துள்ளாம், சுமார் முன்று வருடங்களுக்கு முன்பிருந்த நம்பிக்கையாளர் சபைக்கு ஜமாஅத்தார் சார்பில் வெளியிடப் பட்ட வேண்டுகோள் நான்காவது பக்கத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது, என்பதையும் அறியத் தருகிறோம். ஜமாஅத்தார்களின் வேண்டுகோள்கள் இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்பதை கவலையுடன் அறியத் தருகிறோம்.

வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்.
S.Y.M.SALEEM DEEN.


கௌரவ தவிசாளர்,
19, பைப் லைன் றோட்,
 மாத்தளை




No comments:

Post a Comment