Friday, May 23, 2014

அன்பின் SLTJ அன்பர்களுக்கு! (பதில் சொல்வீர்களா?)


(வாசகர் கடிதம்) உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து சாந்தியும், அமைதியும் கிட்ட வேண்டும் எனப் பிரார்த்திப்பதா? இல்லை நேர்வழி கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதா? எனத் தெரியாது யோசித்த வண்ணமே இம் மடலை உங்களுக்கு வரைகின்றேன்.


“இதுவரை இருந்த அனுமதி இரத்து! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய மாநில உயர்நிலைக்குழு அதிரடி அறிவிப்பு” என்ற தலைப்பில் TNTJ வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாகப் படித்தேன். அதன் பின்னர் எனக்கேற்பட்ட சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் உங்களிடமேயே கேட்கின்றேன். TNTJ யின் இலங்கைக் கிளையே நீங்கள் (SLTJ) என்ற வகையில் தான் இதனை உங்களிடம் கேட்கிறேன். தயவுசெய்து வழமைபோல் என்னையும் என் வார்த்தைகளையும் சந்திக்கு இழுக்காமல் பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நான்கு பிரதான தலைப்புகளில் (ஜும்ஆ உரை, பொது மேடைகள், பேஸ்புக், தேர்தல்) எடுக்கப்பட்ட சில தீர்மானங்களிலுள்ள சந்தேகங்களையே கேட்க விரும்புகிறேன்.

“நம்முடைய ஜும்மா உரைகளில் எந்த இயக்கத்தைப் பற்றியும் பேசக்கூடாது, மார்க்கம் சம்மந்தமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும்” இதன் அர்த்தம் என்ன?

ஜும்ஆ நிறைவேறுவதற்கு சில ஷர்த்துக்கள் இருக்கின்றன. அதில் ஒன்றாக இயக்கங்களை விமர்ச்சித்தலும் இருந்ததா? நான் அப்படி நினைக்கும் அளவுக்கு உங்களது குத்பாக்களில் அடுத்தவர்களைத் தூற்றும் பண்பு இருந்தது. இதனை, வாசிக்கின்ற அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

“எந்த இயக்கத்தைப் பற்றியும் பேசக் கூடாது. மார்க்கம் மட்டுமே பேச வேண்டும்”

அப்படி எனின், மார்க்கத்துக்கு நிகராக இயக்கம் பற்றிப் பேசுதலும் இதுவரை உங்களிடம் இருந்து வந்துள்ளது. தற்போது எடுத்துள்ள நிலைப்பாடுதான் சரி எனின், குர்ஆன் சுன்னாஹ் போதிக்கும் மார்க்கத்துக்கு முரணாகவா இதுவரை குத்பாக்கள் செய்தீர்கள். அவ்வாறெனில் மார்க்கத்துக்கு முரணாக ஜும்ஆ செய்த, தொழுத உங்களது நிலைப்பாடு என்ன?

“எந்தத் தனிநபர் பற்றியூம் ஜும்ஆவில் பேசக் கூடாது” இவ்வசனம் கூறும் விளக்கம் யாது?

ஜும்ஆ உரையில் மாத்திரம் எந்தத் தனிநபரையும் விமர்ச்சிக்கக் கூடாது அது அல்லாத ஏனைய எல்லா உரைகளிலும் தமக்கு எதிரான சிந்தனையுள்ளவர்களை வெளுத்து வாங்கலாம் என்பதுதான் அர்த்தமா?

அல்லது

எந்தவொரு உரையிலும் தனிநபர்களை விமர்ச்சிக்கக்கூடாது என்பது தான் அர்த்தமா? அப்படித்தான் என்றிருந்தாலும் இன்னொரு சந்தேகம் எழுகிறது?

“தனி நபர்களை விமர்ச்சிப்பதற்கு அல்குர்ஆனிலும் சுன்னாஹ்விலும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன” என நீங்கள் தான் கூறினீர்கள். அப்படியாயின் இப்போது TNTJ இப்படி ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பது குர்ஆன் சுன்னாஹ்வுக்கு முரணாகவா? ஆம் எனில், குர்ஆன் சுன்னாஹ்வுக்கு முரணாக இயங்கும் TNTJ தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

பேஸ்புக்

“தலமைமையின் சார்பில் நடத்தப்படும் பேஸ்புக் இல் கருத்து சொல்லும் நம் சகோதரர்கள் வரம்பு மீறி தரக்குறைவாக எழுதுகின்றனர். இதனால் ஜமாஅத்தின் நன்மதிப்பு பாதிக்கின்றது. எனவே இனிமேல் நமது முக நூலில் நமது ஆக்கங்கள் மட்டும் தான் பதிவேற்றப்படும். வரவேற்றோ எதிர்த்தோ எழுதப்படும் எந்த விமர்சனமும் அனுமதிக்கப்படாது.”

இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டிய விடயம் “நம் சகோதரர்கள் வரம்பு மீறி தரக்குறைவாக எழுதுகின்றார்கள் இதனால் ஜமாத்தின் நன்மதிப்பு பாதிக்கிறது” இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஜமாத்தின் நன் மதிப்பை பாதுகாப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?

“………வரவேற்றோ எதிர்த்தோ எழுதப்படும் எந்த விமர்சனமும் அனுமதிக்கப்படாது” என்பதா?

அல்லது

தரக்குறைவாக, விழுமியம் பேணாது எழுதுகின்ற உங்கள் சகோதரர்களை “நீங்கள் பிழையில் இருக்கிறீர்கள் திருந்தி விடுங்கள்” எனக்கூறி திருத்தி விடுவதா?

இப்படி தப்புத் தவறா தீர்மானங்கள் எடுப்பதும், பின்னர் அவற்றை வாபஸ் வாங்குவதும் உங்களது வழமையான பல்லவி தானே! இதிலும் அதுதான் நடந்தேறியிருக்கிறது.

இறுதியாக உங்களிடம் சில கேள்விகள்

# TNTJ வெளியிட்டிருக்கும் கருத்து மார்க்கத்துக்கு முரணா? இல்லை அதுதான் மார்க்கமா?

# முரண் எனின், அவர்களோடுள்ள உங்களது தொடர்புகள் எவ்வாறு அமையும்? கிளை அந்தஸ்தை வாபஸ் வாங்கிக் கொள்வீர்களா? அல்லது TNTJ வழிகெட்டு விட்டது என அறிக்கை விடுவீர்களா?

# TNTJ யின் அறிக்கை சரியானது எனின் இனி வரும் காலங்களில் உங்களது நிலைப்பாடு எவ்வாறு அமையும். இதேபோக்கை கைக்கொள்வீர்களா?

# அப்படி நீங்களும் இதே நிலைப்பாட்டுக்கு வந்தால், இதுவரை காலமும் நீங்கள் எத்தனையோ தனி நபர்களை வரம்புகளை மீறி தரக்குறைவாக ஏசினீர்கள். அவர்களது மனம் நோகும்படி நடந்தீர்கள். அவர்களிடமும் முஸ்லிம் சமூகத்திடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்பீர்களா? அல்லது அதுவும் சரி இதுவும் சரி என்ற நிலைப்பாட்டில் இருப்பீர்களா?

உடனுக்குடன் பதில் சொல்லும் SLTJ அன்பர்களே! தயவு செய்து என் சந்தேகங்களை நிவர்த்திப்பீர்களா?
 

Hazarth Raafi
gelioya
 
 
 
( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. ) 

No comments:

Post a Comment